“தலைவரின் கோபாலபுரம் வீட்டு வாயிலில் அவரைக் காண்பதற்காக அமர்ந்திருந்தேன். வேறு சிலரும் இருந்தார்கள். சட்டென்று எல்லோரிடமும் ஒர் நிமிர்வு வந்ததைக் கண்டேன். ஓர் இளைஞர் யாரையும் பொருட்படுத்தாமல் சடசடவென்று உள்ளே போய் உரிமையுடன் அமர்ந்துகொண்டார்.
தலைவரின் உதவியாளர்கள் கூட அவரைக் கண்டு சற்று ஆடியதாகவே தோன்றியது. இதுபோல் முரசொலிமாறன் தான் தலைவர் வீட்டில் உரிமையுடன் நுழைவதைப் பார்த்திருக்கிறேன். அதன்பின்னர் தயாநிதி வருவார். ஸ்டாலின் செல்வார். இவர்கள் ரத்த உறவுகள். இவர்களைத் தவிர யாராக இருந்தாலும் உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. இந்த இளைஞர் அவர்களில் ஒருவராகத் தோன்றினார். விசாரித்தேன். அவர்தான் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்! ஆச்சரியப்பட்டேன். தளபதிக்கு பிரியமான மருமகன். அவரை அரசியல்ரீதியாக மறுகண்டுபிடிப்பு செய்து நவீன தொழில்நுட்பம், புதிய மக்கள் தொடர்பு முறைகளால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி வருகிறவர் இவரா என்று ஆச்சரியப்பட்டேன். ஸ்டாலின் இல்லத்தில் மட்டுமல்ல; கோபாலபுர இல்லத்திலும் அவர் மரியாதையுடன் பார்க்கப்படுகிறார் என்பது ஆச்சரியத்தை அளித்தது” என்று நம்மிடம் கூறினார் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த உடன்பிறப்பு ஒருவர்.
சபரீசன் முதலில் ஊடகங்களில் பேசப்பட்டது, எதிர்முகாமில் இருந்த வைகோ இல்லத்தின் முன்னால் தேர்தல் வெற்றியைக் கொண்டாட வெடி வைக்கப்போனதாக சொல்லப்பட்டபோதுதான். அது 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது. அதன் பின்னர் திமுக 2011 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றது. அதன் பின்னர் 2013-லேயே சபரீசன் பெயர் மீண்டும் அடிபட ஆரம்பித்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஸ்டாலின் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தைகளை அவர்தான் பேசுகிறார் என்றார்கள். இதற்கிடையில் ஸ்டாலினுக்கான வலுவான இணைய தளம் ஒன்றையும் அவர் வடிவமைத்து சமூக ஊடகங்களில் ஸ்டாலினை உலவவிட்டார். ஏராளமான இளம் வாக்காளர்களிடம் அவரைத் தொடர்பு கொள்ள வைப்பதற்கான திட்டம் அது. 2014 தேர்தலின் போது நரேந்திரமோடியின் பிரச்சாரம் பெருமளவு நவீன தொழில்நுட்பங்களை நம்பி நடைபெற்றது. பலரையும் கவர்ந்தது. அதேபோல் ஸ்டாலினை வழக்கமான அரசியல் பிரச்சார உத்திகளில் இருந்து மாறுபட்டு, மக்களை சென்றடையும்வண்ணம் செய்யப்படும் உத்திகளைக் கண்டு புராதனமான முறைகளை இன்னமும் பழக்கத்தில் வைத்திருக்கும் திமுக முன்னணியினர் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
ஸ்டாலினை முதல்வர் வேட்பாளர் என்று திமுக இன்னமும் அறிவிக்காத போதிலும் மெய்நிகர் உலகில் அவரை முதல்வர் வேட்பாளராக நிறுவிவிட்டிருக்கிறார் சபரீசன். ஸ்டாலின் சிஎம் பார் 2016 என்கிற சமூக வலைதளப் பக்கங்கள் சில ஆண்டுகளாகவே புழக்கத்தில் உள்ளன.
முடியட்டும்; விடியட்டும் -என்ற முழக்கத்துடன் மதுரை, கடலூர், திருப்பூர் ஆகிய இடங்களில் ஸ்டாலின் தனியொரு ஆளாகப் பேசிய கூட்டங்கள் அரசியல் விமர்சனக் கூட்டங்களாகவும் ஸ்டாலினின் பிம்ப உருவாக்கக் கூட்டங்களாகவும் அமைந்தன. “மாநாடுகளில் தான் இதுமாதிரி கூட்டம் வரும்., ஆனால் இக்கூட்டங்கள் பிரம்மாண்டமானவையாக அடுத்த தேர்தலில் யார் திமுக சார்பில் முன்னிலை வகிக்கப்போகிறார்கள் என்பதைச் சொல்லுபவையாக அமைந்தன. இக்கூட்டங்கள் பற்றிய ஏற்பாடுகள் சென்னையில் இருக்கும் தனி அலுவலகத்தில் இருந்து செய்யப்பட்டன. கூரையில்லாத மேடை வடிவமைப்பு வித்தியாசமாக இருந்தது. மேடையின் பின்புலம், வண்ணக்கலவை எல்லாம் மிகவும் நேர்த்தியாகவும் கூட்டத்தைக் காண்பிக்கும் பிரம்மாண்ட கோண புகைப்படங்களும் ஸ்டாலினை தெளிவாக முன்னிலைப்படுத்தின. இதுபோன்ற கூட்டங்கள் முடிய நள்ளிரவு ஆகிவிடும். ஆனால் மாலை ஐந்துமணிக்குத் தொடங்கி ஏழுமணிக்குள் இவை முடிவடைந்தன. இரவு பத்துமணிக்கெல்லாம் வீடு திரும்பிவிட்டோம். அத்துடன் சூரிய வெளிச்சம் இருக்கையிலேயே அவ்வளவு பெரிய தொண்டர்கூட்டத்தை முழுமையாகப் பார்த்தது எங்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. சபரீசன் எங்களிடம் நேரடியாகப் பேசுவதில்லை. அவருடன் மகேஷ் பொய்யாமொழி, இடையில் ஏற்பாடுகளைச் செய்ய, செல்வகணபதி, ஆர்.டி.சேகர், அன்பகம் கலை போன்றோர் இருக்கிறார்கள். நமக்கு நாமே நடைபயணத்தின்போது, இவர்கள்தான் ஒவ்வொரு இடத்துக்கும் முன்கூட்டியே வந்து ஏற்பாடுகளை உள்ளூர் நிர்வாகிகளுடன் சேர்ந்து செய்தனர்” என்று சொல்கிறார் திமுக நிர்வாகி ஒருவர்.
ஸ்டாலினின் பிரச்சார செயல்பாடுகளைக் கவனிப்பதற்காக தனியாக ஓர் அலுவலகம் இயங்குகிறது. கட்சியுடன் தொடர்பில்லாத ஆட்கள் அதில் இயங்குகிறார்கள். கணினி செயல்பாடுகள், ஊடகச் செயல்பாடுகள் போன்றவற்றைக் கவனிக்க தனியாக தொழில்முறை ஆட்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். எப்படி பேசுவது, திரும்புவது, காமிராவைப் பார்ப்பது போன்ற விஷயங்கள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்படுகின்றன என்று சொல்லப்படுகிறது.
நமக்கு நாமே நடைபயணத்தில் அனைவரையும் புருவம் உயர்த்தவைத்தது ஸ்டாலின் அணிந்த ஆடைகள்தான். இளஞ்சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களில் சட்டைகள், அடர் நிறங்களில் பாண்ட்கள், நியான் லேஸ்கள் ஒளிரும் ஷூக்கள் என்று ஸ்டாலின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவரைப்போல் தோன்றினார். ஸ்கூட்டி ஒட்டினார்; ட்ராக்டர் ஓட்டினார். கரைவேட்டிக் கட்சிக் காரர்கள் உடன்வராமல் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்தார். கோயில்களுக்குள் சென்றார். திமுகவில் பெரும்பாலானோர் இந்துக்கள் தான் என்றார். சிறுசிறு அரங்கக் கூட்டங்களில் மைக் பிடித்து உரையாடினார். இவையனைத்துமே நன்கு வடிவமைக்கப்பட்டன. தேர்ந்த மக்கள் தொடர்பு குழுவின் ஆலோசனையில் பேரில் அவற்றை வடிவமைத்து கடந்த சிலமாதங்களாக தன் மாமனார் ஸ்டாலினை அடுத்த தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக வடிவமைத்து நிறுத்தியிருக்கிறார் சபரீசன்! வெற்றியோ தோல்வியோ மருமகன் ஆற்றும் இந்த உதவியை தமிழகம் வியப்புடன் பார்க்கிறது!
டிசம்பர், 2015.